ஹெப்ரைடிஸ் எழுப்புதல்
ஸ்காட்லாந்தின் ஹெப்ரைடிஸ் தீவுகளில் 1949 களில் தேவாலயங்கள் வறண்டு போயிருந்தன, முதியோர் மட்டுமே ஆராதனையில் கலந்து கொண்டனர். மக்கள் ஆடம்பர வாழ்கையை அதிகம் விரும்பினர், மேலும் வழிபாடுகள் அலட்சியம் பண்ணப்பட்டது. சபைகளின் இந்த நிலை எத்தனை பேரைப் பாதித்தது என்று தெரியவில்லை, ஆனால் இது இரண்டு முதிர் வயதான சகோதரிகளை ஆழமாகப் பாதித்தது.
ஹெப்ரைடிஸில் உள்ள லூயிஸ் தீவில் உள்ள பார்வஸ் என்ற கிராமத்தில் சாலையோரத்தில் ஒரு சிறிய குடிசையில் பெக்கி மற்றும் கிறிஸ்டின் ஸ்மித் என்ற இரண்டு வயதான பெண்கள் வசித்து வந்தனர். அவர்களுக்கு வயது எண்பத்து நான்கு மற்றும் எண்பத்து இரண்டு ஆகும். பெக்கி பார்வையற்றவர் மற்றும் அவரது சகோதரி மூட்டுவலியால் அவதிப்பட்டு வந்தார். அவர்களால் சபையின் ஆராதனையில் கலந்துகொள்ள முடியாததால் அவர்களது சிறிய குடிசையே ஆலயமாக மாறியது. இவர்கள் எழுப்புதலுக்காக ஜெபிக்க ஆரம்பித்தார்கள். கர்த்தர் இவர்களுக்கு: “தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்.” என்ற வாக்குறுதியை அளித்தார். இந்த வாக்குறுதியைப் பிடித்துக்கொண்டு இவர்கள் இருவரும் இரவும் பகலும் ஜெபத்தில் பரிந்து பேசினர்.
மூப்பர் சங்கம் இந்த நிலைமையைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு இறைவனிடம் திரும்பும்படி சபைகளில் அறிவிக்க முடிவெடுத்து சபைகளில் அறிவிப்புகள் தொடங்கப்பட்டன. உள்ளூர் பத்திரிக்கையில் இந்த அறிவிப்புகள் அச்சடிக்கப் பட்டன.
டங்கன் கேம்பேல் அவர்கள் இதைக் குறித்து பின்பு இவ்வாறு கூறினார் : “அந்த இரண்டு பெண்களின் ஜெபங்கள் லூயிஸின் மூப்பர் சங்கத்தை ஏதாவது செய்யத் தூண்டியது என்று இப்போது நான் நம்புகிறேன்.”
தேவாலயங்களுக்கு ஒரு எழுப்புதல் வருவதாகவும் தேவாலயம் மீண்டும் இளைஞர்களின் கூட்டத்தால் நிரப்பப்படும் என்றும் பெக்கிக்கு ஓர் இரவில் வெளிப்பாடு அருளப்பட்டது. அவர் ரெவ். ஜேம்ஸ் முர்ரே மெக்கேயை அழைத்து தேவன் அவருக்குக் காட்டியதைச் சொன்னார். அதற்கு ஜேம்ஸ், “நாம் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?” என்றார். பெக்கி அவருக்கு மறு உத்தரவாக “உங்களை ஜெபத்திற்கு ஒப்புக்கொடுங்கள்; தேவனுக்காகக் காத்திருங்கள். உங்கள் மூப்பர்களையும் உதவியாளர்களையும் ஒன்று சேர்த்து வாரத்தில் இரண்டு இரவுகளாவது ஜெபத்தில் தேவனுக்குக் காத்திருங்கள். உங்கள் சபையின் சார்பாக நீங்கள் அவ்வாறு செய்தால், எங்கள் ஐக்கியத்தின் சார்பாக நானும் என் சகோதரியும் இரவு பத்து மணி முதல் அதிகாலை இரண்டு அல்லது மூன்று மணி வரை ஜெபத்தில் காத்திருப்போம்.” என்றார்.
எனவே ரெவ். ஜேம்ஸ் தனது மூப்பர்களையும் உதவியாளர்களையும் அழைத்து தேவ சமூகத்தில் காத்திருக்கத் தொடங்கினார். அவர்கள் பல மாதங்கள் ஒரு நெற்களஞ்சியத்தில் வைக்கோல் மத்தியில் தேவ சமூகத்தில் காத்திருந்தனர். இந்த வேளைகளில் அவர்கள் “தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்,” (ஏசாயா 44:3) என்ற வாக்குறுதியை உறுதியாகப் பற்றிக்கொண்டு ஜெபிக்க ஆரம்பித்தனர். இது குறைந்தது மூன்று மாதங்கள் நீடித்தது. அவர்கள் எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை.
ஒரு இரவு அவர்கள் தேவனின் சமூகத்தில் காத்திருந்தபோது, ஒரு இளம் டீக்கன் எழுந்து நின்று சங்கீதம் 24-ல் இருந்து படித்தார்: “யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்? கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே. அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், தன் இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான்.” பின்பு மற்றவர்களைப் பார்த்து : “சகோதரர்களே, தேவனோடு நமக்குச் சரியான உறவு இல்லையென்றால், இப்போது நாம் செய்வது போல் காத்திருந்து ஜெபிப்பது எனக்கு மிகவும் ஏமாற்றுவதாகத் தெரிகிறது,” என்று கூறிவிட்டு பின்னர் அவர் வானத்தை நோக்கி கைகளை உயர்த்தி உரத்த சத்தத்தோடு : “ஆண்டவரே, என் கைகள் சுத்தமாக இருக்கிறதா? என் இதயம் தூய்மையானதா?” என்று சொன்னார். அதன் பிறகு அவர் கீழே விழுந்து ஞானதிருஷ்டிக்குள் கடந்து சென்றார். தேவ பிரசன்னம் களஞ்சியத்தை நிரப்பியது மற்றும் தேவ வல்லமையின் அலைகள் அவர்களுக்குள் ஓடத் தொடங்கியது. அவர்கள் எழுப்புதலின் வாக்குறுதியைச் சந்தேகத்திற்கு இடமின்றி விசுவாசிக்கத் தொடங்கினர்.
இந்த எழுப்புதலை வழிநடத்தத் தேவனால் பயன்படுத்தப்பட்ட டங்கன் கேம்ப்பெல் இதற்குப் பின் நடந்தவற்றை இவ்வாறு கூறுகிறார்:
“அப்போது நான் அந்த தீவில் இல்லை. பத்து நாட்களுக்கு லூயிஸில் உள்ள பார்வஸுக்கு வருமாறு என்னை அழைத்தபோது நான் வேறொரு பகுதியிலிருந்தேன், எனக்கு வேறு கூட்டங்கள் ஆயத்தப்படுத்தப்பட்டிருந்தபடியால் அடுத்த ஆண்டுக்கான எனது நாட்காட்டியில் பார்வஸை குறித்து வைப்பதாக நான் பதில் எழுதினேன். இருப்பினும் நான் குறிப்பிட விரும்பாத சூழ்நிலைகளால் எனது மற்ற கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன, மேலும் அவர்கள் கேட்டுக்கொண்டபடி அந்த தீவுகளுக்குச் செல்ல முடிந்தது. நான் படகில் வந்தபோது சபையின் ஊழியரும் அவருடைய உதவியாளர் ஒருவரும் என்னைச் சந்தித்தார்கள். நான் கரையில் கால் வைத்ததும் அந்த உதவியாளர் என்னிடம் வந்து, “மிஸ்டர் கேம்ப்பெல், நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? நீங்கள் தேவனோடு சஞ்சரிக்கிறீர்களா?” என்றார். நான் அவருக்கு மறுவுத்தரவாக, “நான் தேவனுக்குப் பயப்படுகிறேன் என்று எந்த சூழ்நிலையிலும் நான் சொல்ல முடியும்,” என்று மகிழ்ச்சியுடன் பதிலளித்தேன்.
அன்று இரவு ஒன்பது மணிக்குத் தொடங்கிய ஒரு குறுகிய கூட்டத்தில் சபையில் பிரசங்கிக்க எனக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இது ஒரு குறிப்பிடத்தக்கக் கூட்டம். நாங்கள் எட்டு நாற்பத்தைந்திற்குத் தேவாலயத்திற்குச் சென்றோம். சுமார் 300 பேர் கூடியிருந்ததைக் காணமுடிந்தது. ஆராதனையின் போது உண்மையில் எதுவும் நடக்கவில்லை. அது ஒரு நல்ல கூட்டம். தேவ பிரசன்னத்தையும் அவரது ஆவியின் அசைவாடுதலையும் உணரமுடிந்தது, ஆனால் அதற்கு அப்பால் எதுவும் நடக்கவில்லை. எனவே நான் ஆசீர்வாதம் கூறினேன், நாங்கள் தேவாலயத்தை விட்டு வெளியேறும்போது பதினொன்றாவதற்குக் கால் மணிநேரம் இருந்தது. இரண்டு மணிநேரக்கூட்டம் – லூயிஸில் அது பெரிய காரியமில்லை.
களஞ்சியத்தில் சங்கீதம் படித்த அந்த இளம் டீக்கனுடனேகூட நான் ஆலயத்தின் உள் நடைபாதையில் நடந்துகொண்டிருந்தபோது, அவர் திடீரென்று நடைபாதையில் நின்று வானத்தை அண்ணாந்து பார்த்து, “தேவனே, நீர் எங்களைக் கைவிடமுடியாது. தேவனே, நீர் எங்களைக் கைவிடமுடியாது. தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவதாக நீர் வாக்குறுதி அளித்தீர். தேவனே, நீர் எங்களைக் கைவிடமுடியாது!” என்று கூறினார்.
அவருக்கு அருகில் நின்று என்னை விடத் தேவனை நன்கு அறிந்த ஒரு மனிதனின் முன்னிலையில் நான் என்னைக் கண்டேன். என் அன்பான மக்களே, நாம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று கூறி, “என்னைக் காட்டிலும் தேவனை, ஒருவேளை நான் அறியாத வகையில், அறிந்த ஓர் இளைஞன் இதோ,” என்றேன். விரைவில் அவர் நடைபாதையில் முழங்காலிட்டு தொடர்ந்து ஜெபித்தார், பின்னர் அவர் மீண்டும் ஞானதிருஷ்டிக்குள் கடந்து சென்றார். அப்போது மணி பதினொன்று. தேவாலயத்தின் கதவு திறக்கப்பட்டது, உள்ளூர் கொல்லன் மீண்டும் தேவாலயத்திற்குள் வந்து, “திரு கேம்ப்பெல் ஏதோ அற்புதம் நடந்துள்ளது. தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றும் என்று கேட்டு ஜெபித்தோம். அவர் அதைச் செய்தார்! அவர் அதைச் செய்தார்!” என்று கூறினார்.
நான் தேவாலயத்தின் வாசலுக்குச் சென்றபோது ஏறக்குறைய 600 பேர் கூடிய ஒரு கூட்டத்தைக் கண்டேன். அறுநூறு பேர் – அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? என்ன நடந்தது? அன்றிரவே தேவன் பெந்தேகொஸ்தே வல்லமையோடும் பரிசுத்த ஆவியின் வல்லமையோடு வந்திறங்கினார் என்று நான் நம்புகிறேன்! அப்போஸ்தலர்களின் ஆரம்பக் காலத்தில் என்ன நடந்ததோ அது இப்போது பார்வஸ் திருச்சபையில் நடக்கிறது.
100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சமுதாய கட்டிடத்தில் நடனமாடிக்கொண்டிருந்தனர், அவர்கள் தேவனைப் பற்றியோ நித்தியத்தைப் பற்றியோ சிந்திக்கவில்லை. அவர்களுடைய எண்ணங்கள் அனைத்திலும் தேவன் இல்லை. அவர்கள் அங்கு ஒரு நல்ல இரவைக் கழிக்கக் கூடியிருந்தபோது திடீரென்று தேவனின் வல்லமை நடனத்தின் மீது விழுந்தது. இசை நின்றது, சில நிமிடங்களில் மண்டபம் காலியானது. கொள்ளை நோயிலிருந்து தப்பியோடிய ஒரு மனிதனைப் போல அவர்கள் மண்டபத்தை விட்டு ஓடினர். அவர்கள் விளக்கு எரிந்துகொண்டிருந்த தேவாலயத்தண்டை வந்தடைந்தனர்.
படுக்கைக்குச் சென்ற ஆண்களும் பெண்களும் எழுந்து, ஆடை அணிந்து, தேவாலயத்திற்குச் சென்றனர். ஒரு குறிப்பிட்ட நபர் பத்து நாட்களுக்கு ஒரு கூட்டத் தொடரை நடத்தப் போகிறார் என்ற சபை அறிவிப்பைத் தவிர ஒரு சிறப்பு முயற்சியைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. எந்த விளம்பரமும் செய்யப்படவில்லை. ஆனால் கடவுள் நிலைமையை கையில் எடுத்தார் – அவர் தனது சொந்த விளம்பர முகவரானார். ஆவிக்குரிய பசியும் தாகமும் மக்களை வாட்டி வதைத்தது. அவர்களில் அறுநூறு பேர் இப்போது தேவாலயத்தின் வெளியே நிற்கிறார்கள்.
பிரியமான கொல்லன் சங்கீதம் 102 ஐ வாசிக்க அக்கூட்டம் உடனே சபைக்குள் திரும்பியது, 800 பேர் அமரக்கூடிய அக்கட்டிடத்தில் திரளான அக்கூட்டத்திற்கு இடமில்லாமல் போயிற்று. ஓர் இளம் ஆசிரியை வந்து, “தேவனே, எனக்கு இரக்கம் உண்டா ? தேவனே, எனக்கு இரக்கம் உண்டா?” என்று கதறினாள். அவளும் அந்த நடனக் கூட்டத்தில் ஒருவளாவாள். இன்று அவள் நைஜீரியாவில் மிஷனரியாக இருக்கிறாள்.
இச்செய்தியை கேள்விப்பட்டு அடுத்த இரவு வெவ்வேறு பகுதிகளிலிருந்து அநேகர் வாகனங்களில் சபைக்கு வந்து கொண்டிருந்தனர். தேவ வல்லமை அதில் ஒரு வாகனத்தில் இறங்கியது, அதில் இருந்த 7 பேர் மகிமையாக அந்த இரவு இரட்சிக்கப் பட்டனர். தேவாலயம் முழுவதும் தேவ வல்லமையினால் மக்கள் கிட்டத்தட்ட மயக்கமடைந்தனர், மேலும் அந்த இரவில் தேவனால் தொடப்பட்டும் மகிமையாக மறுபடியும் பிறக்காத ஒரு நபரைக்கூட என்னால் நினைவு கூற முடியவில்லை. நான் அதிகாலை நான்கு மணிக்குத் தேவாலயத்தை விட்டு வெளியேறும் போது, சாலையோரம் ஏராளமானோர் ஜெபித்துக்கொண்டிருந்தனர். அன்று இரவு மறுபடியும் பிறந்தவர்கள் பலர் இன்று வெளிநாட்டு மிஷன் பணியில் உள்ளனர்.
தேவாலயம் மற்றும் வயல்வெளிகள்:
தேவ பிரசன்னம் பார்வாஸிலிருந்து அண்டை மாவட்டங்களுக்கும் பரவியது. ஒரு நாள் நள்ளிரவு ஒரு மணியளவில் அருகில் உள்ள ஒரு தேவாலயத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதாகவும், நான் வருமாறும் எனக்குச் செய்தி வந்தது. நான் வந்தபோது 1000 பேர் அமரக்கூடிய அத்தேவாலயம் நிரம்பியிருந்தது. பரிசுத்த ஆவியானவர் வல்லமையாக அசைவாடினார். ஜனங்கள் முட்டியிட்டு இரக்கத்திற்காகக் கதறுவதை நான் கண்டேன். சபைக்கு வெளியேயும் மக்கள் ஜெபிப்பதை என்னால் கேட்க முடிந்தது.
இரண்டு மணி நேரம் கழித்து நான் தேவாலயத்தை விட்டு வெளியே வந்தபோது, தேவாலயத்திற்குள் நுழைய முடியாத 300 பேர் கொண்ட ஒரு கூட்டம் அருகிலுள்ள வயல்வெளியில் பிரார்த்தனை செய்து கொண்டிருப்பதைக் கண்டேன். ஒரு வயதான பெண் தனக்குத் தூக்கம் வராததால் கூட்டத்தின் சத்தம் குறித்து புகார் கூறினார். ஒரு டீகன் அவளைப் பிடித்து உலுக்கி, “பெண்ணே, நீ நீண்ட நேரம் தூங்கிவிட்டாய்!” என்றார்.
தீவுகளில் ஒரு பகுதி இருந்தது அங்கு மக்கள் நான் வர வேண்டும் என்று விரும்பினர், ஆனால் அந்த அழைப்பை ஏற்க எனக்கு ஏவுதல் இல்லாமலிருந்தது. அந்த பார்வையற்ற சகோதரி பெக்கி என்னைச் செல்லும்படி ஊக்குவித்து, “மிஸ்டர் கேம்ப்பெல், நீங்கள் தேவனோடு நெருக்கமாக இருக்க வேண்டிய பிரகாரம் இருந்தால், அவர் உங்களுக்குத் தம்முடைய இரகசியங்களை வெளிப்படுத்துவார்” என்று கூறினார். நான் அவருடன் ஒரு காலை நேரத்தைக் குடிசையில் ஜெபத்தில் செலவழிக்க ஒப்புக்கொண்டேன். நாங்கள் ஜெபிக்கும்போது சகோதரி பெக்கி, “ஆண்டவரே, இந்த கிராமத்தில் உள்ள ஏழு பேரைக் இரட்சிக்கப்போகிறீர் , அவர்கள் என் பிதாக்களின் தேவாலயத்தில் தூண்களாக மாறுவார்கள் என்று நீர் இன்று காலை என்னிடம் சொன்னது உமக்குத் தெரியும். ஆண்டவரே, நான் உம்முடைய செய்தியை மிஸ்டர் கேம்ப்பெல் அவர்களிடம் கொடுத்துள்ளேன், அவர் அதை ஏற்கத் தயாராக இல்லை என்று தெரிகிறது. ஆண்டவரே, அவருக்கு ஞானத்தைக் கொடுங்கள், ஏனென்றால் அவருக்கு அது மிகவும் தேவைப்படுகிறது!,” என்றார். நான் ஜெபம் முடிந்தவுடனே , “சரி, பெக்கி, நான் அந்த கிராமத்திற்குச் செல்கிறேன்” என்றேன். அதற்கு பெக்கி, “நீங்கள் அதைச் செய்வது நல்லது! தேவன் உங்களுக்கு ஒரு தேவாலயத்தைக் கொடுப்பார்,” என்றார்.
நான் செல்ல ஒப்புக்கொண்டேன். நான் ஏழு மணிக்கு அங்கு வந்தபோது, அங்குள்ள ஒரு பங்களாவில் சுமார் 400 பேர் கூடியிருந்தனர். அவர்களை அங்கு கொண்டு வந்தது எதுவென்று அவர்களால் சொல்ல முடியவில்லை, அது தேவ ஆவியால் நடந்த காரியமாகும். நான், “அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.” (அப்போஸ்தலர் 17:30) என்ற வசனத்திலிருந்து சிறிது நேரம் பேசினேன். ஓர் ஊழியர் என்னைத் தடுத்து, “வாருங்கள், இதைப் பாருங்கள்.” என்றார். நான் வந்து பார்த்த போது கூட்டத்தின் ஒரு பக்கத்தில் சமூகத்தின் மிகவும் துர்கீர்த்தியுள்ளவர்கள் மண்டியிட்டு முகங்குப்புற விழுந்து தேவனிடத்தில் மன்றாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் ஏழு பேர் – பெக்கி குறிப்பிட்ட ஏழு மனிதர்கள்!
பக்கத்துத் தீவுக்குச் சென்றபோது, அங்குள்ள மக்கள் ஆவியில் மிகவும் குளிராகவும் இருதயக் கடினத்துடனும் இருப்பதைக் கண்டேன். சிலரை என்னுடன் ஜெபிக்க வருமாறு அழைப்பு கொடுத்தனுப்பினேன், அவர்களுடன் டொனால்ட் என்ற இளைஞனை அழைத்து வருமாறு குறிப்பாகக் கேட்டுக் கொண்டேன். பதினேழு வயதான டொனால்ட் அண்மையில் இரட்சிக்கப்பட்டிருந்தான், அதற்கு சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஒரு மலையில் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெற்றான். அன்று இரவு நாங்கள் தேவாலயத்திலிருந்தபோது, டொனால்ட் தரையில் கண்ணீருடன் முன்னால் அமர்ந்திருந்தான். டொனால்ட், தேவனுடன் நான் இல்லாத வகையில், நெருங்கிய தொடர்பில் இருப்பதை நான் அறிந்தேன். அதனால் நான் பிரசங்கிப்பதை நிறுத்திவிட்டு, அவனை ஜெபிக்கும்படி கேட்டேன். டொனால்ட் எழுந்து, “தேவனே, நான் திறந்த கதவு வழியாகப் பார்ப்பது போல் உணர்கிறேன். நான் சிம்மாசனத்தின் நடுவில் ஆட்டுக்குட்டியைக் காண்கிறேன், மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்கள் அவருடைய இடுப்பில் உள்ளன,” என்று ஜெபித்தான். பிறகு ஜெபத்தை நிறுத்தி அழ ஆரம்பித்தான். தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்த பிறகு, கண்களையும் கைகளையும் வானத்தை நோக்கி உயர்த்தி, “தேவனே, அங்கே வல்லமை உள்ளது. அதை அவிழ்த்துவிடும்!” என்றான். அந்த நேரத்தில் தேவ வல்லமை தேவாலயத்தில் இறங்கியது. அறையின் ஒரு முனையில் மக்கள் தங்கள் கைகளை உயர்த்தி, வானத்தை நோக்கி கண்களை உயர்த்தி, இரண்டு மணி நேரம் அதே நிலையிலிருந்தார்கள்; பத்து நிமிடம் கூட இந்த நிலையில் இருப்பது கடினம். மறுபுறம், மக்கள் இரக்கத்திற்காகக் கதறி அழுதனர். ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு கிராமம் முழுவதும் தேவ வல்லமை பரவியது, அன்றிரவு அந்த கிராமத்தில் குடும்பத்திலுள்ள யாராவது ஒருவர் இரட்சிக்கப்படாத வீடு ஒன்று கூட இல்லை.
எழுப்புதலுக்கு விரோதம்:
மாவட்டத்தின் ஒரு பகுதியில் எழுப்புதலுக்குக் கடுமையான எதிர்ப்பு இருந்தது, ஏனென்றால் நான் இரட்சிப்புக்குப் பிறகு பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை ஒரு தனி மற்றும் தனித்துவமான நிகழ்வாகப் பிரசங்கித்தேன். கூட்டத்திற்கு ஒரு சிலரே வருமளவுக்கு என்னை எதிர்த்தவர்கள் வெற்றி பெற்றனர். ஒரு நாள் இரவு கூட்டத்தின் தலைவர் என்னிடம் வந்து, “இப்போது பரவி வரும் சூழ்நிலையைச் சரி செய்ய நாம் செய்யக்கூடியது ஒன்றே ஒன்றுதான். ஜெபத்தில் தேவனுக்காகக் காத்திருப்பதற்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டும்,” என்றார். மேலும் தன்னுடைய வீட்டில் நாங்கள் சந்திக்கலாம் என்று கூறிய விவசாயி ஒருவர் அங்கே இருக்கிறார் என்று எனக்குச் சொல்லப்பட்டது. அவர் ஒரு கிறிஸ்தவர் அல்ல, அவருடைய மனைவி இரட்சிக்கப்படவில்லை, ஆனால் அவர்கள் தேவ பயமுள்ளவர்கள். நாங்கள் அம்மாவட்டத்தின் முப்பது ஊழியர் மற்றும் மூப்பர்களும் இந்த விவசாயி வீட்டில் சந்தித்தோம். நான் ஆவியில் மிகவும் கடினமாக உணர்ந்தேன். நான் ஜெபித்தேன். ஊழியர்கள் அனைவரும் ஜெபிக்கத் தொடங்கினர். எங்கள் மத்தியில் ஒருவர் நரகத்தின் சக்திகளெல்லாம் ஒன்று சேர்ந்து எங்களுக்கு எதிராக வந்தது போல் உணர்ந்தார். நள்ளிரவில் நான் மூப்பரில் ஒருவரிடம் திரும்பி, அவர் தேவனைப் பற்றிப்பிடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறினேன். அந்த மனிதர் எழுந்து நின்று சுமார் அரை மணி நேரம் ஜெபித்தார். (நிச்சயமாக, நாங்கள் எழுப்புதலிலிருந்தோம் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும், எழுப்புதலில் நேரம் என்று எதுவும் இல்லை. யாரும் கடிகாரத்தைப் பார்க்கவில்லை.) அவர் ஜெபத்தை நிறுத்தி, பரலோகத்தை நோக்கி கையை உயர்த்தி, “ஆண்டவரே, உமது கௌரவம் ஆபத்தில் உள்ளது என்று உமக்குத் தெரியுமா? ‘தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்,’ என்று வாக்குறுதி அளித்தீர், ஆனால் நீர் அவ்வாறு செய்யவில்லை.” என்று கூறினார்.
இப்படிப்பட்ட வார்த்தைகளை உச்சரித்துக்கொண்டு நம்மில் எத்தனை பேர் தேவனை அணுக முடியும் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மீண்டும் அவர், “இந்த பிரார்த்தனை கூட்டத்தில் மிஸ்டர் கேம்ப்பெல் உட்பட ஐந்து ஊழியர்கள் உள்ளனர், அவர்கள் ஒவ்வொருவரும் உம்சமூகத்தில் எங்கு நிற்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் என் இதயத்தைப் பற்றி எனக்கு ஏதாவது தெரியுமென்றால், உமது வல்லமையின் வெளிப்பாட்டிற்காக நான் தாகமாக இருக்கிறேன் என்பதை என்னால் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன்.” என்று கூறி நிறுத்தினார். பின்னர் உரத்த குரலில், “தேவனே, உம் கௌரவம் ஆபத்தில் உள்ளது, நான் இப்போது உமக்குச் சவால் விடுகிறேன், தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றும்,” என்றார். அந்த நேரத்தில் நாங்கள் இருந்த அந்த கல் வீடு உண்மையில் ஒரு இலை போல் குலுங்கியது. அப்போஸ்தலர்கள் ஜெபிக்கும்போது அவர்கள் கூடியிருந்த இடம் அதிர்ந்தது எனக்கு உடனடியாக நினைவுக்கு வந்தது. இந்த பிரியமான மனிதர் தனது ஜெபத்தை முடித்ததும், நான் ஆசீர்வாதம் சொன்னேன். அதிகாலை இரண்டு மணியாகி இருந்தது, நான் வெளியே வந்தபோது கிராமம் முழுவதும் தேவ வல்லமையால் ஒளிர்ந்துகொண்டிருந்தது. நான் ஒரு வீட்டிற்குச் சென்றபோது, சமையலறையில் ஒன்பது பெண்கள் மண்டியிட்டு தேவனிடத்தில் இரக்கத்திற்காக மன்றாடிக்கொண்டிருப்பதைக் கண்டேன். அன்றிரவு இரட்சிக்கப்பட்ட ஒரு பெண்மணி நமது கேலிக் மொழியில் சில சிறந்த கேலிக் பாடல்களை எழுதியுள்ளார். அடுத்த ஞாயிற்றுக்கிழமை, தேவாலயத்தில் கலந்துகொள்ள இரண்டு மைல்களுக்கு அப்பாலிருந்து வந்தவர்களால் சாலை நிரம்பியது. அந்த கிராமத்தின் மதுபானக் கடை அன்றிரவு மூடப்பட்டது, மீண்டும் திறக்கப்படவில்லை. இது தேவன் கிரியை செய்துகொண்டிருப்பதாகும். தேவன் அனுப்புகிற எழுப்புதல் எப்பொழுதும் பரிசுத்த எழுப்புதலாக இருக்கும்.”
டொனால்ட்: ஜெபிக்கும் சிறுவன்:
பதினேழு வயதில் இரட்சிக்கப்பட்ட டொனால்ட் எழுப்புதல் காலத்தில் ஒரு ஜெப வீரனாக மாறினான். அந்நாட்களில், அவனுக்கு ஜெபிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டபோதே ஆவியின் வல்லமையான அபிஷேகம் ஊற்றப்பட்டது. பார்வஸில் ஓர் இரவு தேவ பிரசன்னம் இறங்கி ஜனங்களை ஏவத் தொடங்கியது. காவல் நிலயத்தின் ஒரு காவலர் முழுமையாக இரட்சிக்கப்பட்ட தேவ பயமுள்ள மனிதனானதினால் ஜனக்கூட்டம் காவல் நிலயத்தில் கூட ஆரம்பித்தது. பெக்கியின் குடிசையும் அந்தக் காவல் நிலையத்தின் அருகில் தான் இருந்தது. கேம்பேல் உடன் டொனால்டும் அங்கு வந்தான். அங்குக் கூடியிருந்த நூற்றுக்கும் மேலான மக்கள் மத்தியில் டொனால்ட் கைகளைக் கூப்பி ஒரே ஒரு வார்த்தையை மட்டும் உச்சரித்தான் – “பிதாவே!” உடனே தேவ பிரசன்னம் வல்லமையாக வெளிப்பட்டது, எல்லா இதயங்களும் உருகியது, ஜனக்கூட்டம் இரக்கத்திற்காக மன்றாடியது. அநேகர் அதே இடத்தில் தேவ மந்தையில் சேர்க்கப்பட்டனர்.
காலனிஸ் கிராமத்தில் பாவங்களில் மரித்தவர்களைத் தேவ வல்லமை பற்றிப்பிடிக்கும் வரை அவன் தொடர்ந்து ஜெபித்தான். அவர்கள் தொடப்பட்டு ஜீவனுள்ள தேவனின் ஆலயத்தில் ஜீவனுள்ள கற்களாக நிறுவப்பட்டனர்.
அவள் ஒரு தரிசனத்தைக் கண்டாள்:
பேதுரு ஜெபத்தில் தியானித்துக் கொண்டிருந்தபோது, கொர்னேலியஸ் குடும்பத்தை ஆசீர்வதிக்க வேண்டும் என்ற தம்முடைய நோக்கத்தைத் தரிசனத்தின் மூலம் தேவன் வெளிப்படுத்தினார். தேவன் லூயிஸில் இதே போன்ற முறைகளைப் பயன்படுத்தினார். குறிப்பாக ஒரு இளம் பெண் மீண்டும் மீண்டும் ஞானதிருஷ்டி அடைந்தாள், அந்தச் சந்தர்ப்பத்தில் அவளுக்கு ஜெபத் தேவையில் உள்ளவர்களைப் பற்றிய வெளிப்பாடுகள் கிடைத்தன, அந்த வெளிப்பாடுகள் கேம்பெலுக்கு அனுப்பப்பட்டன.
ஒரு இரவு டங்கன் ஸ்டோர்னோவேயில் இருந்தபோது, இந்த இளம் பெண் இருபது மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு பெண் ஆவியின் வேதனையில் இருப்பதைக் கண்டாள். டங்கன் அந்த செய்தியை அறிந்ததும் தான் அந்தப் பெண்ணைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று அறிந்தார். தன் வசதி மற்றும் பாதுகாப்பைப் பற்றி யோசிக்காமல், அவர் மோட்டார் சைக்கிளில் அந்த கிராமத்திற்குச் சென்று, இந்த இளம் பெண் சொன்னபடி வேதனையிலுள்ள அப்பெண்ணைக் கண்டுபிடித்தார். கலங்கிய அந்தப் பெண்ணுக்கு அவர் சொன்ன வார்த்தைகள் விடுதலையைக் கொண்டுவந்து அவளுக்கு இரட்சகரை அறிமுகப்படுத்தியது.
ஞானதிருஷ்டியில் மூழ்கிய பிறகு இந்த பெண் தனது தரிசனத்தின் மூலம் கொடுத்த ஒரு செய்தி கூட தவறாக நிரூபிக்கப்படவில்லை. இது எழுப்புதலின் ஒரு அம்சமாகும், டங்கன் இதை ஊக்குவிக்கவோ அல்லது விளக்கவோ முயற்சிக்கவில்லை. ஆனால் அது தேவனுடைய செயல் என்பதை அவர் ஒப்புக்கொண்டார், மேலும் அதில் தலையிட மறுத்துவிட்டார். இதைச் சாத்தானின் கிரியையுடன் ஒப்பிட்டவர்களை, அவர்கள் மன்னிக்க முடியாத பாவத்திற்கு ஆபத்தான முறையில் நெருங்கி வருவதாக எச்சரித்தார்.
பிரார்த்தனை செய்யும் கசாப்புக் கடைக்காரர்:
எழுப்புதலில் தனக்கு மிக முக்கியமானவர்களும், ஆவியில் நெருங்கிய ஐக்கியமானவர்களுமான ஜெபிக்கும் மனிதர்களைச் சந்திக்காமல் டங்கன் தீவை விட்டு வெளியேற மாட்டார். தொலைதூர வடமேற்கு தீவுகளில் வாழும் அவர்களின் ஞானம் மற்றும் உலக தரிசனத்தைக் கண்டு அவர் ஆச்சரியப்பட்டார்.
ஜெபிக்கும் மனிதர்களில் ஒருவரான பார்வஸில் உள்ள கசாப்புக் கடைக்காரரைச் சந்திக்க டங்கன் வந்தார். அந்நேரம் அந்த நபர் கிரீஸ் தேசத்திற்காகக் கொட்டகையில் ஜெபம் செய்துகொண்டிருப்பதைக் கேட்டார். லூயீஸ் தீவைச் சேர்ந்த ஒரு கசாப்புக் கடைக்காரன் கிரேக்கத் தேசத்தில் எப்படி ஆர்வம் காட்டமுடியும் என்பதை டங்கனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவரை சந்தித்த சிறிது நேரத்தில் டங்கன், “இன்று நீங்கள் கிரேக்கத்திற்காக எவ்வாறு ஜெபம் செய்ய ஆரம்பித்தீர்கள்? கிரீஸ் எங்கிருக்கிறது என்று தெரியுமா?” என்று கேட்டார். அதற்குக் கசாப்புக் கடைக்காரர் : “இல்லை, மிஸ்டர். கேம்ப்பெல், ஆனால் தேவனுக்குத் தெரியும், அவர் இன்று காலை கிரேக்கத்திற்காக ஜெபிக்கச் சொன்னார்!” என்று பதிலளித்தார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, டப்ளினில் உள்ள ஒருவருக்கு டங்கன் அறிமுகமானார், அந்த நபர், தான் கிரீஸுக்கு வணிகப் பயணத்திலிருந்தபோது அங்குள்ள கிறிஸ்தவர்களின் கூட்டத்தில் பேசும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும், தேவ ஆவியானவர் அங்கு வல்லமையாகக் கிரியை செய்யத் தொடங்கினபடியால் பல வாரங்கள் அங்குத் தொடர்ந்து பிரசங்கித்ததாகவும் டங்கனிடம் கூறினார். மேலும் அயர்லாந்தில் உள்ள அவரது சகோதரரை அழைத்துத் தான் வரும் வரை வியாபாரத்தைக் கவனிக்கும்படி அறிவுறுத்தினதாகவும் கூறினார். டங்கன் இந்த நிகழ்வுகளின் நாட்களை பார்வஸில் உள்ள கசாப்புக் கடைக்காரர் கிரேக்கத்திற்காக ஜெபித்த நாளோடு ஒப்பிட்டுப் பார்த்து அவர் ஜெபித்த அதே நாளில் தான் கிரேக்கத்தில் எழுப்புதல் தொடங்கியது என்பதைக் கண்டுபிடித்தார்!
எழுப்புதலைப் பற்றிய வரையறை: டங்கன் கேம்ப்பெல்:
“முதலில் எழுப்புதல் என்றால் என்ன என்று சொல்ல விரும்புகிறேன். சுவிசேஷக் கூட்டமோ அல்லது ஒரு சிறப்புக் கூட்டமோ எழுப்புதல் அல்ல. ஒரு வெற்றிகரமான சுவிசேஷ கூட்டத்தில் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான மக்கள் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற முடிவு செய்வார்கள், ஆனால் அப்பகுதியுள்ள ஜனங்கள் தேவனின் தொடுதலை அனுபவிப்பதில்லை, மேலும் தேவாலயங்கள் கூட்டத்திற்கு முன்பு இருந்ததைப் போலவே தொடர்ந்து செயல்படும். ஆனால் எழுப்புதலில் ஒரு மாவட்டம் (பகுதி) முழுவதும் தேவன் கடந்து வருகிறார். திடீரென்று தேவனைக் குறித்த உணர்வு ஜனங்கள் மத்தியில் பரவுகிறது. தேவ ஆவியானவர் ஆண்களையும் பெண்களையும் பற்றிப்பிடிக்கிறார். மக்கள் தேவனுக்காகக் காத்திருப்பதற்குத் தங்களை அர்ப்பணிக்கும்போது அவர்களின் சொந்த அலுவல்கள் கைவிடப்படுகின்றன.”
பரலோகத்தால் அனுப்பப்படும் எழுப்புதலுக்கான விலைக்கிரயம் ஒருபோதும் மாறுவதில்லை. பரிசுத்த ஆவியின் பாவத்தைக் குறித்த உணர்த்துதல் ஹெப்ரைடிஸ் தீவுகளில் வெள்ளம்போல் பரவுவதற்கு முன்பு வலிமைமிக்க மனிதர்களின் இதயங்கள் தேவனுக்கு முன்பாக உடைந்தன, பல மாதங்களாக அவர்கள் இரவின் பல மணி நேரம் ஜெபத்தில் பிரசவ வேதனைப்பட்டனர். இந்த மனிதர்கள் இவ்விதமாக ஜெபிப்பதற்கு தங்கள் வீடுகள் மற்றும் அலுவல்களின் பொறுப்புக்கள் இருந்தபோதிலும் தேவனுக்கு முன்பாக காத்திருக்க நேரம் ஒதுக்க வேண்டியிருந்தது!
இது அநேகமாக இன்றைய மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கலாம். காரியங்களை எளிதாக்கி நேரத்தைக் குறைக்க நம்மிடம் அனைத்து நவீன ஆடம்பரங்களும் உள்ளன, ஆனாலும் இப்பொழுதும் ஜெபிக்க நேரம் கிடைப்பதில்லை! என்ன ஒரு வேதனையான முரண்பாடு!
போலியான பிரசவ வலியைக் காட்டுவதில் நாம் திறமையானவர்களாக மாறியிருக்கலாம், ஆனால் அவ்வாறு செய்வதால் குழந்தை பிறக்காது.
இன்று போலியான எழுப்புதலைக் கொண்டுவருவதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம், ஏனென்றால் அவ்வாறு செய்வதற்கு எந்த விலைக்கிரயமும் செலுத்தவேண்டியதில்லை, மேலும் மெய்யான எழுப்புதலுக்கான விலைக்கிரயம் மிகவும் அதிகம்.