நல் நோக்கங்களோ அல்லது நல்விளைவுகளோ வழிமுறைகளை நியாயப்படுத்துவதில்லை.

பெரும்பாலும் நாம் ஒரு காரியத்தில் பயன்படுத்தப்பட்ட வழிமுறைகளை அதன் விளைவைக் கொண்டு தீர்மானிக்கிறோம், கிறிஸ்தவத்தில் கூட நல்விளைவுகள் உண்டானால் அக்காரியம் தேவனுடைய அங்கீகாரத்தைப் பெற்றதாக நாம் கருதுகிறோம். அத்தோடு ஒரு மனிதனுடைய  நற்கிரியைகளும் அதன் நல்விளைவுகளும் அவனுடைய வாழ்க்கைமுறையை நியாயப்படுத்தும் என்றும் நாம் கருதுகிறோம். இவ்வகையான நம்பிக்கை உலகெங்கிலும் கிறிஸ்தவத்திற்கு வேறு எதையும் விட அதிகச் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. வேதத்தைத் தியானிக்க நேரமில்லாத இன்றைய தலைமுறைக்கு உணர்வுகளும் விளைவுகளுமே தேவனாகிவிட்டன.

நோக்கம் அல்லது விளைவு நன்மையாக இருப்பதால் மட்டுமே அதற்காகப் பயன்படுத்தப்பட்ட வழிமுறை சரியன்று  ஸ்தாபிக்கப்பட முடியாதென்பதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். கிறிஸ்தவத்திற்கான அளவுகோல்கள் விளைவுகளோ அல்லது முடிவுகளோ அல்ல, ஆனால் வேத வசனங்களே. வேதத்துடன் ஒத்துப்போகாத எந்த ஒரு வழிமுறையும், அது எவ்வளவு பெரிய நற்பலன்களை  விளைவித்தாலும், தவறானது, அது நிராகரிக்கப்பட வேண்டும் மற்றும் மறுக்கப்பட வேண்டும். அத்துடன் ஒரு மனிதனுடைய கிரியைகளின் பலன் எத்தனை செவ்வையாய்த் தென்பட்டாலும் வாழ்க்கைமுறை வேதத்தின்படி இல்லையென்றால் அம்மனிதனைப் பின்பற்றக்கூடாது.

“அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.” மத்தேயு 7:22

இயேசுவின் நாமத்தில் தீர்க்கதரிசனம் உரைப்பதும், பிசாசுகளைத் துரத்துவதும், அற்புதங்களைச் செய்வதும் மகிமையான விளைவுகள் அல்லவா? ஆனால் இயேசு, “அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.” என்றார்.

இயேசு அவர்களிடம் எதைத் தேடினார்? – பிதாவின் சித்தத்தின்படி செய்வது.

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

இவர்களுடைய அற்புத அடையாளங்களும் அதன் விளைவுகளும் நன்மையாகத் தென்பட்டும் இவர்களுடைய வாழ்க்கை (வாழவேண்டிய முறை) பிதாவின் சித்தத்தின்படி இல்லாததால் இவர்கள் தேவனுக்கு முன்பு அக்கிரம செய்கைக்காரராயிருந்தார்கள்.

புதிய ஏற்பாட்டின் ஊழியர்களாகிய  நமக்குப் பிதாவின் அச்சித்தம் தெளிவாகவும் எளிமையாகவும் புதிய ஏற்பாட்டில் எழுதப்பட்டுள்ளது. இந்த தரநிலைக்குள் வராத எந்த வழிமுறையையும் வாழ்க்கைமுறையையும் நாம் ஏற்றுக்கொள்ள கூடாது.

தாவிது தேவனுடைய பெட்டியை எருசலேமிற்குக் கொண்டுவர எடுத்த முயற்சி மிகவும் மேன்மையான தேவசித்திற்குட்பட்ட முயற்சியாகும், ஆகிலும் கோகாத் புத்திரர் சுமக்க வேண்டிய (எண்ணாகமம் 4:15 ) பெட்டியை (புது இரதம்) மாட்டுவண்டியில் ஏற்றிக் கொண்டுவந்த அந்த வழிமுறை தேவனுக்குப் பிரியமானதாக இருக்கவில்லை, பெட்டியைத் தொட்ட ஊசா அடிக்கப்பட்டான். 2 சாமுவேல் 6:1-8

தாவீதின் நோக்கம் செவ்வையாய் இருந்தும் தேவ முறைமையின்படி அதை கிரியைக்குட்ப்படுத்தாதாதால் தேவன் அதை நிராகரித்தார். இரண்டாம் முறை தாவிது முறையாகத் தேவனுடைய பெட்டியைச் சுமந்து கொண்டுவரச்செய்தான். 2 சாமுவேல் 6:12-15

கர்த்தர் மோசேயிடம், “கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள்; அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்;” என்றார் (எண்ணாகமம் 20:8), ஆனால் மோசே பாறையை அடித்தார். என்ன நடந்தது பாறை பிளந்து, “உடனே தண்ணீர் ஏராளமாய்ப் புறப்பட்டது, சபையார் குடித்தார்கள்; அவர்கள் மிருகங்களும் குடித்தது,” எவ்வளவு அருமையான விளைவு ? பத்து லட்சத்திற்கும் மேலானோருடைய தாகம் தீர்க்கப்பட்டது, ஆனால் அது வழிமுறையை நியாயப்படுத்தவில்லை.

இங்கு மோசேயின் வாழ்க்கையும், நோக்கமும், கிரியையும் மட்டுமல்லாமல் விளைவும் செவ்வையாக இருந்தும் வழிமுறை தேவக் கட்டளைக்கு விரோதமாக இருந்ததால் தேவன் மகிழ்ச்சியடையவில்லை. மோசே மற்றும் ஆரோன் இருவரும் வாக்குதத்தம்ப்பண்ணப்பட்ட தேசத்தை இழந்தனர்.

பொன்னால் ஆன கன்றுக்குட்டிக்குப் பலி செலுத்த ஆயத்தமாயிருந்த யெரொபெயாமை எச்சரிக்கத் தேவன் ஒரு தீர்க்கதரிசியை பெத்தேலுக்கு அனுப்பினார். (1 ராஜாக்கள் 13:1-5) தீர்க்கதரிசி அற்புத அடையாளத்தோடே அச்செய்தியை அறிவித்த பிறகு நீ அப்பம் புசியாமலும், அங்கே தண்ணீர் குடியாமலும், நீ போனவழியாய்த் திரும்பிவராமலும் இரு, என்ற தேவ கட்டளைக்கு விரோதமாக வேறொரு தீர்க்கதரிசியின் பொய் தீர்க்கதரிசனத்தைக் கேட்டு வந்த வழியே திரும்பி அப்பம் புசித்து தண்ணீர் குடித்ததால் வழியிலே ஒரு சிங்கம் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனைக் கொன்றுபோட்டது. (1 ராஜாக்கள் 13:20-24)

அனுப்பப்பட்டக்காரியம் செவ்வையாய் பூரணமடைந்தாலும், விதிமுறைகளை மீறினதற்காக அவன் மரித்தான். இன்றும் தேவன் காரியத்தின் பூரணத்தை மட்டுமல்லாமல் வழிமுறைகளையும் வாழ்க்கைமுறைகளையும் உற்று நோக்குகிறார்.

இன்று நாம் எவ்வளவு அதிகமாக ஓர் ஊழியம் அல்லது ஊழியரை விளைவுகளின் மகத்துவத்தை மட்டும் பார்த்து மதிப்பிடுகிறோம், மேலும் அவர்களுடைய வாழ்க்கைமுறை மற்றும் கைக்கொள்ளப்பட்ட வழிமுறைகள் வேதப்பூர்வமானதா என்பதைப் பார்க்கத் தவறிவிடுகிறோம். இது கேட்டுக்கேதுவான பழக்கமாகும். ஒரு மனிதனுடைய வழிமுறை அல்லது வாழ்க்கைமுறை வேதத்தின்படி இல்லை என்றால், நோக்கமும் கிரியையும் அதன் விளைவும் எவ்வளவு நன்மையாக இருந்தாலும் அது தேவனுக்குப் பிரியமற்றது.

அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்யும் அனேகருடைய வாழ்க்கை வேதத்திற்குப் புறம்பாக உள்ள இந்நாட்களில் விளைவுகளை மட்டுமே பார்த்து மற்றவர்கள் பின்பற்றும் வழிமுறைகளை பின்பற்றாதீர்கள். அதற்காகப் பயன்படுத்தப்பட்ட வழிமுறைகள் வேதப்பூர்வமானதா என்பதையும் பார்த்த பின்பு மட்டும் அவைகளைப் பின்பற்றுவீர்களாக.

மெய்யான கிறிஸ்தவத்தை நிறுவுவது ஒவ்வொரு கிறிஸ்தவனின் கடமையாகும்.