நிக்கோலஸ் லுட்விக் ஜின்சென்டார்ஃப்

பிறப்பு26-05-1700
இடம் ஜெர்மனி
தரிசனம்முலு உலகம்
இறப்பு09-05-1760

நிக்கோலஸ் லுட்விக் ஜின்சென்டார்ஃப் ஒரு ஆன்மீகத் தலைவர், பிஷப் மற்றும் இறையியலாளர் ஆவார்.  இவர் மொராவிய ’ஜெப எழுப்புதல்’  இயக்கத்தில்  குறிப்பிடத்தக்கப் பங்காற்றினார். இவர் சாக்சோனியில் உள்ள டிரெஸ்டனில் வலுவான கிறிஸ்தவ பின்னணியைக் கொண்ட ஒரு மதிப்பிற்குரிய குடும்பத்தில் கி.பி. 1700 மே 26 அன்று பிறந்தார். அவருடைய தாயார் இயேசு கிறிஸ்துவின் மீதான ஆழமான அன்பை அவருக்குள் விதைத்தார், அது அவருடைய வாழ்நாள் முழுவதும் அவருக்குள் நிலைத்திருந்தது.
 
இளைஞனாக இருந்தபோது  ஜின்சென்டார்ஃப் தன் வாழ்கையில் ஒரு ஆன்மீக நெருக்கடியைச் சந்தித்தார். அது  கிறிஸ்துவின்மேலுள்ள  அவரது நம்பிக்கையை ஆழமாகப் புரிந்துகொள்ள வழிவகுத்தது. இயேசு கிறிஸ்து வணங்குதலுக்குரிய ஒரு நபர் மட்டுமல்லாமல் தன்னை ஆழமாக நேசிக்கும்  இரட்சகர் மற்றும் நண்பர் என்றும் அவர் விசுவாசிக்கத் தொடங்கினார். இந்த நம்பிக்கை அவருடைய வாழ்க்கைக்கும்  ஊழியத்திற்கும் ஊன்றுகோலாக மாறியது. அவர் இயேசுவுடனான தனிப்பட்ட உறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்துபவராக அறியப்பட்டார்.
 
கி.பி. 1722 ஆம் ஆண்டில் விசுவாசத்தின் நிமித்தம் துன்புறுத்தப்பட்ட  மொராவியர்களை அவர் சாக்சோனியில் உள்ள தனது குடும்பத் தோட்டத்தில் தங்கும்படி அழைத்து குடியேற்றுவித்தார்.   அங்கு அவர்கள் கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படையில்  எளிமையான வாழ்க்கை  வாழத் தொடங்கினர். இருப்பினும் இச்சமூகம் விரைவில் உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து துன்புறுத்தலை எதிர்கொண்டது, அவர்கள் மொராவியர்களை சமூக ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாகக் கருதினர். ஜின்சென்டார்ஃப் அவரது சமூகத்துடன் தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, மேலும் அவர்கள் இறுதியில் ஹெர்ன்ஹட்டில் குடியேறினர், அங்கு அவர்கள் தங்களுடைய பொது விசுவாசம் மற்றும் ஜெபத்திற்கான  அர்ப்பணிப்பை  மையமாகக் கொண்ட ஒரு புதிய சமூகத்தை நிறுவினார்கள்.
 
அவரது  பணிகளில் குறிப்பிடத்தக்க ஒன்று 100 ஆண்டுகள் நீடித்த ஒரு “ஜெப  எழுப்புதல்”-ஐ தொடங்கியதாகும். உட்குழப்பங்களால் பாதிக்கப்பட்டிருந்த மொராவியர்களிடையே மனந்திரும்புதல் மற்றும் நல்லிணக்கத்திற்குப் பிறகு கி.பி. 1727 ஆகஸ்ட் 13 அன்று ஒரு பொது  ஆராதனையின்  போது பரிசுத்த ஆவியின் வல்லமையான அபிஷேகத்தை அவர்கள் அனுபவித்தார்கள். தங்களுக்குள் மிகுந்த அன்பு, மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமையை உணர்ந்தார்கள். ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் மாறி மாறி ஒரு மணிநேரம் ஜெபிக்கும் 24 மணி நேர ஜெபக் கூட்டத்தைத் தொடங்க அவர்கள் முடிவு செய்தனர். இந்த ஜெபக்கூட்டம் 1827 வரை ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தடையின்றி தொடர்ந்து நடைபெற்றது.  நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற  இப்படிப்பட்ட ஒரு 24 மணிநேர ஜெப ஐக்கியம் இதற்கு முன்போ பின்போ நடைபெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
 இந்த ஜெப எழுப்புதல் ஜின்சென்டார்ஃப் மற்றும் மொராவியர்களை ஒரு முன்னோடியான  மிஷனரி இயக்கத்தைத் தொடங்க தூண்டியது. இருபத்தைந்து  ஆண்டுகளுக்குள், கிரீன்லாந்து, வட அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா போன்ற உலகின் பல்வேறு பகுதிகளுக்கு 100-க்கும் மேற்பட்ட மிஷனரிகளை அவர்கள் அனுப்பினார்கள். வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மொழிகள் கொண்ட மக்களுக்கு அவர்கள் சுவிசேஷத்தை வைராக்கியத்துடனும் இரக்கத்துடனும் பிரசங்கித்தனர். அவர்கள் எங்குச் சென்றாலும் பள்ளிகள், மருத்துவமனைகள், அனாதை இல்லங்கள் மற்றும் அச்சகங்களை நிறுவினர்.
 
ஜான் வெஸ்லி, சார்லஸ் வெஸ்லி, ஜார்ஜ் வைட்ஃபீல்ட், வில்லியம் கேரி மற்றும் டேவிட் லிவிங்ஸ்டன் போன்ற கிறிஸ்தவ தலைவர்களுடைய வாழ்வில் இவர்களுடைய பணி தாக்கத்தை ஏற்படுத்தியது.  அதிலும் ஜான் வெஸ்லி மொராவிய இயக்கத்தின்  மூலமாகவே இரட்சிக்கப்பட்டார் என்பதும்  மொராவிய இயக்கத்தின் தாக்கத்தின் காரணமாகவே  மெதடிஸ்ட் இயக்கத்தின் நாடித்துடிப்பாகக் கருதப்பட்ட  குழு அமைப்புகள்  அமைக்கப் பட்டன  என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
ஜின்சென்டார்ஃப் ஒரு தொலைநோக்குள்ள தலைவர் ஆவார், அவர் மொராவியன் சபைகளை  ஒரு மிஷனரி இயக்கமாக வடிவமைத்தார். அவர் பாடல்கள், பிரசங்கங்கள், பிரார்த்தனைகள் மற்றும் இறையியல் கட்டுரைகளை எழுதிய ஒரு சிறந்த எழுத்தாளராகவும் இருந்தார். அவர் ஒரு கிறிஸ்தவ முன்னோடியாக இருந்தார், அவர் வெவ்வேறு பிரிவுகளிடையே கிறிஸ்தவ ஒற்றுமையை மேம்படுத்த முயன்றார். பூர்வீக அமெரிக்கர்கள், ஆப்பிரிக்க அடிமைகள் மற்றும் யூதர்கள் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க  சமூக நீதிக்காகவும் பாடுபட்டார்.
 
ஜின்சென்டார்ஃப் கி.பி. 1760 மே 9 அன்று ஹெர்ன்ஹட்டில் நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டு  மரணமடைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *